1. பரங்க்களிலிருக்கிற
பிதாவே, ஓர் மனப்பட
ஜெபத்தால் உம்மைத்தேட,
அடியாருக்குக் கற்ப்பித்தீர்;
வாயோடே உள்ளங் கூப்பிட நீர்
ஒத்தாசையை நீர் அருள.
2. ஆ, உம்முடைய நாமமே
மாமேன்மையாக; பொய்யையே
நரர் விலக்கி உம்மண்டை
திரும்பவும், மெய் வேதத்தை
அடியார் நன்றாய் என்றைக்கும்
கைக் கொண்டதில் நடக்கவும்.
3. பேய் ஆண்ட இங்கும்முடைய
தெய்வீக ராச்சியம் வர;
அடியார் நெஞ்சை உமது
வரங்களாலே ஜோடித்து,
பிசாசைக் கட்டி, உம் சொந்த
சபாயைக்கடாட்சியும் கர்த்தா
4. விண் எங்கும் ஆம்போல் மண்ணிலும்
நீர் வேண்டும் என்றதாகவும்
அடியார் உமக்குண்மையாய்
கீழ்ப்பட்டடங்கத் தக்கதாய்
நீர் மாமிசமும் ரத்தமும்
இச்சிப்பதைத் தடுக்கவும்.
5. நீர் அன்றன்றுள்ள அப்பத்தை
அத்தோடும் மனத்திருப்தியை
அளித்துச் சண்டை, கலகம்,
உபாதை, பஞ்சம், விக்கினம்,
விசாரம், பண ஆசையும்
விலக்கிப்போகப் பண்ணவும்.
6. பிறர்க்கு நாங்க்கள் யாவையும்
மன்னிக்கும்போல் அடியார்க்கும்
கடனை நீர் இரக்கமாய்
மன்னித்து, நாங்கள் தயவாய்
அவரவர்க்கெந்நேரமும்
இரங்கக் கட்டளையிடும்.
7. ஆ, எங்களைத் தயாபரா,
துர்ச்சோதனையில் உட்பட
ஒட்டாமல், உமதாவியின்
துணையால் சத்துருக்களின்
வினையையுங் கலைப்பையும்
ஜெயிக்கத் தைரியம் கொடும்.
8. அடியாரை எத்தீமைக்கும்
விளக்கிப் போட்டு ரச்சியும்,
நல்லாறுதலைக் கடைசி
இக்கட்டிலும் தந்தருளி,
பிரியும் ஆத்துமத்தையே
நீர் ஒப்புக்கொள்ளும், கர்த்தரே.
9. அடியார் வேண்டுதல்களை
நீர் தரச் சித்தமானதை
நன்றாக நம்பல் ஞாயமாம்
சந்தேகமில்லை, இதெல்லாம்
மெய்ப் பக்தருக்கு வருமே,
என்கிறோம் ஆமேன் இதற்கே.
M.Luther, † 1546.