250. ஆ. என்னில் நூறு வாயும் நாவும்

1. ஆ. என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்
அவைகளால் ப்ராசங்கித்து,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயாத் தொனியாய்ப் பாடுவேன்

2. என் சத்தம் வான மளவாகப்
போய் எட்ட வேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.

3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடனே தோத்தரி;
தோத்தரி, எந்தன் ஆவியே,
தோத்தரி, எந்தன் தேகமே.

4. வனத்திலுள்ள பச்சையான
எல்லாவித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே.
என்னோடே கூட நீங்களும்
அசைந் திசைந்துப் போற்றவும்.

5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே,
துதியாய் உங்கள் சத்தமும்
ஒன்றா யெழும்பி ஏறவும்.

6. பிதாவே, தேகம் ஆவி யாவும்
உம்மால் அல்லோ உண்டாயிற்று,
சரீர ஈவாம் ஊணுந்தாவும்,
நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு
தெரிந்து கொண்ட அன்புமே
மா உபகாரம், கர்த்தரே.

7. ஆ, இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே
கொடும் பிசாசினுடைய
கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே
விலக்கி நீங்கலாக்கின
ரட்சிப்புக்காக என்றைக்கும்
என் ஆவி உம்மைப் போற்றவும்.

8. மெய்யாகத் தேற்றும் தேவ ஆவி,
ஆ, உமக்குப் புகழ்ச்சியே;
உம்மாலே இந்தக் கெட்ட பாவி
இரட்சிப்புக்குள்ளானானே
இங்கென்னில் நன்மை ஏதுண்டோ
அதுமது பயிர் அல்லோ.

9. என் மேலே யாரால் நன்மை பாயும்,
தயாபரா, உம்மால் அல்லோ.
யார் என்னைக் காத்துக் கொள்ளும் தாயும்
தகப்பனும், நீர் அல்லவோ;
சொற்கடங்காச் சகாயர் நீர்
மன்னித் திரக்கஞ் செய்கிறீர்.

10. என்மேல் நீர் வைத்த என் சுமையை
மா உபகாரந்தான் என்பேன்;
அடிக்கும் பட்சமுள்ள கையைப்
பணிந்து முத்தஞ் செய்கிறேன்;
இவ்வடி நன்மைக்கானது
நான் பிள்ளை என்றுங்  காட்டிற்று.

11. இந்நேரமட்டும் நீர் ரட்சித்தீர்,
பலவித இக்கட்டிலே
எப்போதும் என்னை ஆதரித்தீர்,
கண்ணார அதைக் கண்டேனே;
மா மோசம் வந்தும், எனக்குச்
சந்தோஷ ஜோதித் தோன்றிற்று.

12. இப்போதும் உம்மைப் பக்தியாகத்
தினம் போற்றாதிருப்பேனோ;
இக்கட்டில் கூடப் பூரிப்பாக
ஜெயங் கொண்டாட லாகாதோ;
எல்லாம் வீழ்ந்தும் விழட்டுமேன்;
நான் துக்கத்துக் கிடங்கொடேன்.

13. தீட்பான மாய்கை என்னை விட்டு
விலக வேண்டும் மென்கிறேன்;
கர்த்தாவே, உம்மை நான் துதித்து,
என் செல்வமென்று போற்றுவேன்.
என் நெஞ்சு தேவரீருக்கே
ஒப்புக் கொடுத்திருக்குமே.

14. என் நாவு பேசும் நாள் மட்டாக
என் நெஞ்சையும் மட்டுக்கும்
நான் உமதன்பைப் பூரிப்பாகத்
தோத்திரிப்பேன் நித்தமும்.
என் வாய் ஓய்ந்தாலும் ஓய்ந்திரேன்;
என் உள்ளத்தாலே போற்றுவேன்.

15. நான் மண்ணில் பாடும் ஏழையான
துதியை ஏற்றுக் கொள்ளுமேன்;
நான் விண்ணில் தூதருக்கொப்பான
பிற்பாடு நன்றாய்ப் போற்றுவேன்;
அப்போ நான் வானோர் கும்புடன்
புதிய பாட்டாய்ப் பாடுவேன்.

J. Mentzer, † 1734.