284. ஆ, சாக்ரதைப்படுங்கள், எவன்

1. ஆ, சாக்ரதைப்படுங்கள்,
எவன் தீவட்டியும்
எரியப் பார்த்திருங்கள்
நல்லோரே, ரா வரும்;
ஜெபத்திலே போராடி
விழிக்கத் தேவையே;
பத்தா எழும்பும் நாழி
ஏதென்றறியோமே

2. அப்போதெதிர் கொண்டோடி
மகிழ்ந்து பூரிக்க,
உன் தீவட்டியைச் சோடி
என் றெச்சரிக்கிற
சீயோனின் காவல்காரர்
சொல் கேட்டு, சீர்ப்பட
இருங்கள், நிர்விசாரர்
நினைப்பு விருதா.

3. ஓ, புத்தியுற்றிருக்கும்
நற்கன்னிகைககளே,
தலையை ஏறெடுக்கும்
முகாந்தரம் உண்டே
பரத்துக் கலியாண
வாழ்வாயத்தப்படும்;
நாம் நம்பினோரைக் காண
ஆசித்த நாள் வரும்.

4. சீக்கிரமே வருவார்,
உறக்கந் தள்ளுவோம்,
அடையாளந் தருவார்,
மரங்கள் பூத்துப்போம்,
வசந்தகாலத்துக்குச்
சமீபமாகிறோம்
துக்கித்தவர்களுக்குப்
பகல் உதிக்கப்போம்.

5. விழிப்பதே நற்புத்தி
அதேனென்றால் கர்த்தா
பதர்களைக் கொளுத்தி
மகா பயங்கரப்
பலனைத் துஷ்டருக்கும்
பேய் மிருகத்தையும்
பணிந்தவர்களுக்கும்
கொடுக்கும் நாள் வரும்.

6. சீயோனை நேசித்தோரே,
முன் அழுததுபோல்
இனி மகிழ்ச்சியோடே
ஜெயத்தைப் பாடுங்கள்,
உபத்ரவப் பங்காளி
இங்கான படியால்.
பத்தாவால் மணவாளி
விண் க்ரீடம் பெறுவாள்.

7. உடந்தையாய்ச் சகித்து
மரித்த நீங்களே
உடந்தையாய்க் களித்து,
கிலேசமின்றியே
தெய்வாசனத்தைச் சூழக்
கம்பீரித்தரசர்
சிங்காரங்கொண்டு, கூடப்
பிழைத்து ஆளுவார்.

8. வென்றோரின் தோரணங்கள்
மா துய்ய வஸ்திரம்,
சாகாமையின் வரங்கள்,
அனந்த பாக்கியம்,
மரித்தப்பின் செழிப்பும்,
அறுப்புக் காலமும்,
போர் செய்தப்பின் கெலிப்பும்,
அங்கே அகப்படும்.

9. எருசலேமின் ஊரும்,
ஜெயித்தோர் யாவரும்
மகிழிச்சியோடே கூடும்
அரண்மனைகளும்,
பொன்வீதி, கலியாண
விருந்தும், தம்பிரான்
கண்ணீர் துடைப்பதான
இடமும் அங்கேதான்.

10. ஆ, இயேசு ஸ்வாமி, வாரும்
எழும்புமேன் கர்த்தா;
உதித்தொளியைத் தாரும்
ரட்சிப்பின் சூரியா
அடியார் போர் நாள் தோறும்
பெருகுகின்றதே,
அதை முடித்துப் போடும்
அன்புள்ள இயேசுவே.

Laurentius Laurenti, † 1722