344. நான் இயேசு மீட்பரில்

1. நான் இயேசு மீட்பரில் விளங்கும்
சிநேகத்தை வணக்குவேன்;
என்னை இப்பூச்சி மேல் இரங்கும்
மா அன்புக் கொப்புவிக்கிறேன்.
என்னை மறந்து ஆழமாக
இவ்வன்பிலே அமிழ்வேனாக.

2. மா தயவாய் என்மேல் மிகுந்த
விருப்பம் வைத்தீர், கர்த்தரே
இந் நேசத்தாலே இழுப்புண்ட
என் நெஞ்சும் உம்மை நாடுமே.
உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டேன்;
உம்மைத் தெரிந்து கொள்ளக் கற்றேன்.

3. என் பங்கு நீர் உம்மிலல்லாமல்
வேறெங்கும் பாக்கியம் காணேன்.
நான் லோகப் பொருளை நாடாமல்,
உம்மோடிருக்க எங்குறேன்.
மெய் ஓய்வையும் மகிழ்ச்சியையும்
என் ஆவி உம்மில் கண்டடையும்.

4. என் மீட்பரே, மா ஆழமாக
விழுந்த என்னைத் தேவரீர்
அன்பாய் ரட்சிக்கிறதற்காக
உமதிரத்தம் சிந்தினீர்.
உமக்கென் இதயம் படைப்பேன்.
என்றைக்கும் உமக்கே பிழைப்பேன்.

5. உமது நாமம் கல்வெட்டாக
என்னில் பதியப்பண்ணுமேன்;
அதை என் நெஞ்சில் நித்தமாக
நான் பத்திரப்படுத்துவேன்.
ஆ, என் நடத்தை யாவிலும்
இந் நாமமே விளங்கச் செய்யும்!

6. பிதாவின் நெஞ்சம் இன்பமான
இந்நாமத்தில் திறந்ததே
இதோ, மா ஆழ்ந்த கடலான
சிநேகம் வெளிப்பாடுதே.
ஆ, பாவியே, இவ்வன்புக்காக
நீ அவரை நேசிப்பாயாக!

7. ஆ, இயேசு, நேசத்தின் ஊற்றான
உமது நாமம் மேன்மையே
ஜெயித்தோர் யாரும் ஆழமான
இவ்வாற்றில் பானம் பண்ணச்சே,
என்றைக்கும் தாழ்ந்து பணிவார்கள்;
கைகூப்பி நின்று பூரிப்பார்கள்.

G.Tersteegen, † 1769.