74. இயேசு நாயகனைத் துதி செய்

பல்லவி

ஏசு நாயகனைத் துதி செய், செய்,
செய், செய், செய், ஏசு நாயகனை.

சரணங்கள்

1. பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே?
பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய். - ஏசு

2. ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,
வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய். - ஏசு

3. தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி[3], கதிர், மீன் முதல் பொருளெதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை. - ஏசு

4. நாதபூதபௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய். - ஏசு

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: தேவவரம்