152. ஒரு மருந்தரும் குருமருந்து

அரும் குருமருந்தே

பல்லவி

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே.

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு

சரணங்கள்

1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து. - ஒரு

2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
தீர்க்கத் தரிசிகள் செப்பிய மருந்து. - ஒரு

3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
செவிடு, குருடூமை தின்ற மருந்து,
மானா[1] திருத்துவ மான மருந்து,
மனுவாய் உலகினில் வந்த மருந்து. - ஒரு

4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
ஜீவன் தவறா தருளும் மருந்து,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. - ஒரு


[1] மகிமையுள்ள

ராகம்: மோகனம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: யோ. பால்மர்