153. ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க

உனக்கென்ன குறை மகனே?

பல்லவி

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?

அனுபல்லவி

சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை. - ஒரு

சரணங்கள்

1. கப்பலினடித் தட்டில்-களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால்-கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும்-ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு-ஏற்ற தந்தை நானென்பார். - ஒரு

2. கடல் தனக் கதிகாரி-கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை-கற்பித்தாரவர்சேயே.
விடுவாளோ பிள்ளையத் தாய்-மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம்-விசுவாசித்திருப்பாயே. - ஒரு

3. உன்னாசை விசுவாசம்-ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண்-உன்னைவிட் டொழியுமா?
இந்நில மீதிலுனக்-கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? - ஒரு

4. உலகப் பேயுடலாசை-உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு-வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி-எழில் வரம் ஒழியாது,
என்றும் மாறாத நண்பன்-இரட்சகருடன் சேர்ந்து. - ஒரு


ராகம்: புன்னாகவராளி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: ச. முத்துசாமி