உமதாவி தரவேணுமே
பல்லவி
சமயமிது நல்லசமயம், உமதாவி
தரவேணுமே சாமி.
அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள்ஞானத் துயிரின்றி,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தனல்மூட்டி யுயிர்தர, - சமய
1. யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பக்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே;
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலைமூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட, - சமய
2. ஜெயமோதவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம்[1] ஞானாமுதின்மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தென்னைத்தாங்கிட
உந்தயையினுற் சாகநல்லாவியை, - சமய
3. ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை, தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலுயிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ஙனம். - சமய
4. பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ்செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள்முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்றநின் சேயராய். - சமய
ராகம்: மோகனம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. மாசிலாமணி
[1] ஆசை