நின் திருவிலம் அளவற இனிதே
பல்லவி
சேனைகளின் கர்த்தரே! நின்
திருவிலம்[1] அளவற[2] இனிதினிதே!
அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத - சேனை
சரணங்கள்
1. திருவருளிலமே, கணுறும்[3] உணரும்
தெருளம்பகமே,[4] இனிதுறும் நிசமிது - சேனை
2. ஈண்டடியார் கேட்டிடும், நின்வசனமினிதே, இனிதே!
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய. - சேனை
3. புவியோர் பதிவான்[5] புகநிதியே![6]
புனருவி ருறுமுழுக் கருளினிதே!
புதுவிடமே, புகுமனமே, புதுமதியே!
பரிவொடு இனிதருள்! - சேனை
4. பேயோட புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவனே, யெனச்சொலி
பேணிடத்துணை ஈவையே!
பேசருமுன்னந்தம், பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர்தரும் - சேனை
5. ஆலய மது நிறைவாக,
அவைக் குறை வொழிந்தேக,
அவரவருனதில மெனமன விடர்சாக,
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்,
ஆலய பர னேச,
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச,
ஆ! புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது? - சேனை
ராகம்: பிலஹரி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: ஞா. சாமுவேல்
[1] திருவில்லம் (ஆலயம்)
[2] அளவில்லா
[3] கண்ணுறும்
[4] கண்
[5] கடவுளின் வானலோகம்
[6] ஏற்பாடே