19. நீர் வெளியே நில்லீராக

1. நீர் வெளியே நில்லீராக
ஆசீர்வாதக் கர்த்தரே,
தயை கூர்ந்தென்னிடமாக
வந்திறங்கும், இயேசுவே.
என் மகிழ்ச்சி தேவரீர்,
சமய சகாயர் நீர்,
ஆ, என் உள்ளத்தில் எரியும்
காய நோவை ஆற்றுவியும்

2. தெய்வ நீதியென்ற சுத்தி
உள்ளத்தை நொருக்குமே
பயங்காட்டும் அதன்புத்தி
கத்திபோல் அறுக்குமே;
தம்பிரானின் கோபமும்
சாபக் குமுறல்களும்
சத்தமாய் என் மேல் முழங்கும்;
என் மனமெல்லாங் கலங்கும்.

3. கிருபைக்குக் காத்திராதே,
நரக நெருப்புக்கு
உள்ளாவாய் என்றோய்வில்லாதே
பேயுங் கூவுகின்றது.
இதல்லாமல் தினமும்
சுய மனசாட்சியும்
என்னை வெகுவாய் வருத்தும்
மேலும் வேதனைப் படுத்தும்

4. நோவை லோகத்தாரிடத்தில்
ஆற்றப்போனேனேயாகில்
கேடு பெருகுந் தலத்தில்
சேர்ந்தேன்; அங்கே ஏதெனில்
மோசம் போக்கும் ஆறுதல்,
துக்கமாங் சந்தோஷங்கள்,
எத்தரான அனுசாரர்,
பரிகாச நேசக்காரர்.

5. உலகத்தில் யாவுங் குப்பை
யாவும் சாரமற்றது.
எந்தப் பெருமை யிருப்பை
பெற்றும் என்ன; வாடும் பூ
உலக ஐஸ்வரியம்
அன்றன்றுள்ள சஞ்சலம்;
இன்பங்கண்டால் இன்றுவாழ்வு
நாளை துக்கமான தாழ்வு.

6. இயேசுவே, சந்தோஷம் யாவும்
உம்மில் இருக்கின்றது.
நீரே என் குடாவுந் தாவும்,
நீரே எந்தன் பூரிப்பு
என் மகா இக்கட்டிலே
என்னைத் தேற்றும் இயேசுவே,
ஸ்வாமி, என்னை ஆத்ரியும்,
ஒளியே என்னில் உதியும்.

7. மனமே, சந்தோஷமாகு,
உன் மனுக்கிரங்குவார்.
திறவுண்டு விரிவாகு
உன்னில் வாசம் பண்ணுவார்
அவர்க் காயத்தப்படு,
அவரை உன் வீட்டுக்கு
எஜமானாய் ஏற்றுக் கொள்ளு,
அவருக்குன் குறை சொல்லு.

8. பார், உன் நோவைத் தயவாக
நீங்கிப் போகப் பண்ணினார்;
மிகவும் இரக்கமாக
உன்னை உயிர்ப்பிக்கின்றார்.
சாத்தான் செய்யும் பொல்லாப்பு
அவரால் அடங்கிற்று
திகிலாய்த் தன் சேனையோடும்
உன்னை விட்டு நீங்கி ஓடும்.

9. உனக்கு நல் வாழ்விருக்கும்,
இயேசு உன்னில் தங்குவார்,
எந்தப பாக்கியங்களுக்கும்
அவர் தாமே காரணர்.
அவர் தயை உன் முடி,
அவர் தங்குங் கோட்டை நீ,
என்றும் அவருக்குள்ளாக
நீ நிலைத்திருப்பாயாக.

10. சத்துராதியின் ஆங்காரம்
அவமாகிறதற்கு
அவர் வானத்தின் கூடாரம்
உன்னை மூடுகின்றது.
தேவதூதர் நேசராய்
ராப்பகல் உன்னை காத்திருந்து,
கையிலுஞ் சுமப்பதுண்டு

11. உன்னால் நடப்பிக்கப்பட்ட
பாவம் யாவும் அற்றது.
ஸ்வாமியின் மகா பலத்த
நேசம் அதை நீக்கிற்று
கிறிஸ்தின் வெற்றி வெற்றியே,
உன்மேல் உலகத்திலே
எந்தக் கேடெழும்பினாலும்,
அவர் ஆசீர்வாதம் ஆளும்.

12. கிறிஸ்து உன்னைப் பட்சமாக
ஏற்றுக் கொண்டிருக்கவே
எந்தத் தீங்கும் நன்மையாக
உனக்குப் பலிக்குமே
நீ திரும்ப அவர்க்கு
மாறா உண்மையாயிரு,
அப்போதுனக்கென்றென்றைக்கும்
போர்ந்த ஆறுதல் கிடைக்கும்.

P.Gerhardt, † 1676