1. ஓர் ஆட்டுக்குட்டி மீட்குதல்
உண்டாக்க இங்கே வந்து,
பூலோகத்தாரின் பாவங்கள்
அனைத்தையுஞ் சுமந்து,
இளைப்பையும் தவிப்பையும்
அடைந்து, எந்த நோவுக்கும்
உபாதிக்கும் அடிக்கும்
கீழாகி, தூஷணத்தையும்
தீட்பான சாவைக்கூடவும்
சாதாய் அனுபவிக்கும்.
2. இவ்வாட்டுக்குட்டி எனக்காய்
அன்போடு வந்த மீட்பர்.
இவர் பிதாவின் சுதனாய்
குறித்த சாபந் தீர்ப்பர்,
என்பிள்ளையே, நான் தண்டிக்க
ஏற்றவரான சகல
நரரை மீட்பாயாக;
கோபாக்கினை பெரியது,
நீயோ எல்லாஞ் சகித்திரு,”
என்றார் இரக்கமாக.
3. “ஆம், என் பிதாவே, படுவேன்
நான் நல்ல மனதாக
எவ்வாதைக்குங் கீழாகிறேன்
என்றாரே பதிலாக.
மாநேசத்தின் அதிசயம்,
இத்தன்மையாக உலகம்
நேசிக்கப்பட்டிருக்கும்.
சிநேகம் தேவ மைந்தனை
பொல்லாதவர்க் சாபத்தைச்
சுமப்பதற்கிழுக்கும்.
4. மரத்தில் ஆணிகளினால்
கடாவப்பட்டுத் தொங்கி,
உள்ளே வியாகுலங்களால்
நிறையப்பெற்றுப் பொங்கி,
புறம்பே ரத்த ஊற்றானார்.
எத்தால் இக்கேட்டுக்குட் பட்டார்.
சிநேகத்தாலே தானே
ஆ, உமதன்புக்கேற்றதாம்
துதியை யார் செலுத்தலாம்,
மகா இரக்கவானே.
5. இவ்வன்பை உயிருள்ள நாள்
எல்லாம் மறக்க மாட்டேன்;
இத்தால் ஒழிய வேறொன்றால்
இனி என் நெஞ்சை ஆற்றேன்.
நீர் என் வெளிச்சம், என் பலம்
நான் மாளும்போதும் என் திடம்
என் கன்மலையும் பங்கும்.
ஆ, என் மனமகிழ்ச்சியே
நான் உமக்குப் பிழைக்கவே
ஒத்தாசை செய்திரங்கும்.
6. நான் உம்மை ராவும், பகலும்,
அன்புள்ள ஸ்வாமி, பாடி,
பலியாய் உமக்கென்னையும்
தினம் படைக்க நாடி,
கருத்தாய் உம்மை நித்தமும்
எல்லா நடக்கையாலேயும்
நான் துதிக்கவே பார்ப்பேன்.
எப்போதைக்கும் இப்பாவியை
நீர் மீட்ட உபகாரத்தை
என் ஞாபகத்தில் காப்பேன்.
7. என் நெஞ்சே, இப்போ நீ விரி
எந்தச் செல்வங்களுக்கும்
மேலாம் செல்வங்களுக்கும்
இதொப்பிலாதிருக்கும்,
மண்ணாஸ்தியாம்பொன் பிடி வெள்ளியும்
பூலோக உச்சிதங்களும்
எல்லாம் வீணாய் ஒழியும்
என் மீட்பரான இயேசுவே,
நீர் சிந்தின இரத்தமே
என் செல்வமும் கதியும்
8. அதெனக் கெந்த வேளைக்கும்
ஏற்ற சகாயங் காட்டும்
படையிலே வெற்றிதரும்,
சலிப்பில் துக்கமாற்றும்
அத்தாலே மெய்மகிழ்ச்சியும்
குறை காணாதத்ருப்தியும்
என் ஆவிக்குக் கிடைக்கும்
அத்தால் என் தாகந் தீர்ந்தது
அதெக் கடனை நீக்கிற்று.
என் குற்றத்தைக் குலைக்கும்.
9. வியாகுலத்தின் பாரத்தில்
அதென்னை ஆதரிக்கும்,
உபத்ரவத்தின் வெய்யிலில்
குளிர்ச்சியை அளிக்கும்.
பகைஞர் தங்கள் மூர்க்கத்தால்
விரோதமாகப் பேசினால்
அதாறுதல் புரியும்;
சாவென்னைக்கொல்ல அணுகில்
அத்தாலே என் அவதியில்
பயமெல்லாந் தெளியும்.
10. அப்போது இந்த ரத்தமே
அடியேன் பரலோகக்
கதியாம் பரதீசிலே
மகிழ்ச்சியோடே போக
ப்ரவேசம் உண்டு பண்ணுமே
அத்தால் ஓர் மாசுமின்றியே
பிதாவின் முன்னே நிற்பேன்.
அத்தால் பொற்கிரீடம் பெற்றோனாய்
த்ரியேகரை மகிழ்ச்சியாய்
எப்போதும் தோத்திரிப்பேன்.
P. Gerhardt, † 1676