194. மறு ஜென்மமாய் ஜென்மித்துத்

1. மறு ஜென்மமாய் ஜென்மித்துத்
தெய்வ அபிஷேகத்தைப்
பெற்று, நற்குணந் தரித்து,
ஓய்வில்லாமல் இயேசுவை
அண்டிக்கொண்டு, உத்தம
சீருமாய் நடக்கிற
கிறிஸ்தோர் யார்என்றாசையாக  
கிறிஸ்தின் வாயால் கேட்போமாக.

2. சுய் மேன்மை கருதாமல்,
தாம் பெற்றதெல்லாம் கர்த்தர்
ஈவென்றிறுமாப்பில்லாமல்
எண்ணிக்கொள்ளும் சிறியர்
மனத்தில் தரித்திரர்
தங்கள் தாழ்வில் பாக்கியர்;
இப்பேர்ப்பட்ட எவ்வேழைக்கும்
வான ராஜ்ஜியம் கிடைக்கும்.

3. தெய்வ மனஸ்தாபமாகத்
தங்களில், பிறரிலும்
உள்ள பாவங்களுக்காக
வெட்கி, மனமாரவும்
துயரப்படுபவர்
அழுவாரும் பாக்கியர்;
தேற்றப்பட்டு வாழுவார்கள்,
இங்கும் அங்கும் பூரிப்பார்கள்.

4. தீமைக்குச் சரிக்கட்டாமல்,
யாவர்க்கும் நல்மனமாய்
ஒன்றிப்போய், இடும்பில்லாமல்
யாவையும் பொறுத்தன்பாய்
தாங்கிக் கொள்ளும் சற்குணம்
சாதுள்ளோரும் பாக்கியர்;
பூமியைச் சுதந்தரிப்பார்.

5. தெய்வ நீதியினுடைய
துப்புரவின் பேரிலும்
நற்கணிகளால் நிறையத்
தக்க நற்சீர் பேரிலும்
பசி தாகமுள்ளவர்
அப்பசியில் பாக்கியர்,
த்ருப்தியாக்கப் படுவார்கள்,
பரிபூரணங் காண்பார்கள்,

6. அயலாரது குறையைப்
பார்த்து மனமுருகி,
பரிதாபத்தோடே கையை
நீட்டிக் கூடினபடி
ஆதரித்திரங்குவர்
ஆற்றுவாரும் பாக்கியர்;
ஏனெனில் அவர்களுக்கும்
அன்புதானே வைத்திருக்கும்.

7. லோகத்தின் அசுத்தமான
இச்சைகள் அனைத்துக்கும்
நீங்கி ஓடித் துய்யதான
வாக்கு, கண், நடக்கையும்
சுத்த நெஞ்சுமுள்ளவர்
தங்கள் கற்பில் பாக்கியர்,
இந்தச் சுத்த மனிதர்கள்
ஆண்டவரைப் பார்ப்பார்கள்.

8. மூண்ட வர்மத்தை அமர்த்தி
சண்டையற்ற நல்மன
உறவாகுதலைக் கட்டி,
நேச குணராகிய
சமாதான மனிதர்
தங்கள் அன்பில் பாக்கியர்,
தம்பிரானின் புத்திரர்கள்
என்னப்படுவர் அவர்கள்.

9. சிலுவையையுஞ் சுமந்து,
நீதியின் நிமித்தியம்
தீங்கனுபவித்து வந்து,
கொடுமைகள் தூஷணம்
நோவும் பட்ட கிறிஸ்தவர்
வெகுவாகப் பாக்கியர்;
பாடுபட்டோருக் கென்றைக்கும்
மோட்ச மகிமை கிடைக்கும்.

10. உங்கள் பேரில் நிந்தையாக
என்னிமித்தியம் நரர்
பொய்யுரைகளை வீணாகச்
சொன்னால், நீங்கள் பாக்கியர்;
முன் நல்லோருக் கதைப்போல்
வந்ததே, மகிழுங்கள்,
மா பலன் என் வசமாக
உண்டென்றார் நற்புத்தியாக.

11. இந்தப் பாக்கியங்களுக்கு
நான் பங்காளியாகவே
நீர் உமதடியானுக்குத்
துணை நிற்பீர், கர்த்தரே
தந்தையே உம்முடைய
மைந்தனை நான் உத்தம
பக்தியாய்ப் பின்பற்ற நாடும்
ஆவியின் கருத்தைத் தாரும்.

J. Heermann, † 1647.