226. நல்ல த்யானமாய் விழித்துத்

1. நல்ல த்யானமாய் விழித்துத்
தெளிவாகென்  மனமே;
தெய்வத் தயவைச் சிந்தித்துத்
தோத்தரி, என் உள்ளமே.
என்னை இந்த நாளிலும்
பேய்க்கும் பல வாதைக்கும்
தப்பக் காத்த என் கண்காணி
கர்த்தர் என்பதைத் தியானி.

2. ஆ, பிதாவே, தயவுள்ள
ஸ்வாமி, நீர் என் வேலையை
வாய்க்கப்பண்ணி, துக்கமுள்ள
பற்பல இடர்களைச்
சத்துருக்களால் வரும்
பார மோசங்களையும்
துரமாக்கினதற்காக
உமக்குத் துதியுண்டாக.

3. நீர் அளிக்கும் நன்மை யாவும்
எண்ணி முடியாதது;
எந்தச் சாதுரிய நாவும்
உம்முடைய அன்புக்குத்
தக்க தோத்திரங்களைச்
சொல்வதற்குப் பலத்தைப்
பெற்றதில்லை; மா விஸ்தாரம்
உம்முடைய உபகாரம்.

4. இன்றையதினம் கழிந்து
ராவிருட்டு வந்த்தது;
சூரிய விளக்கவிந்தது
அதன் ஜோதி நீங்கிற்று;
கர்த்தரே, என் மனத்தில்
இந்த அந்தகாரத்தில்
உமது விளக்கை ஏற்றும்,
அத்தால் என்னை ஆற்றித்தேற்றும்.

5. என் பொல்லாச்சுபாவத்தாலே
நெஞ்சில் ஊறி, என்னிலே
கண்ட பாவத்தை அன்பாலே
நீர் மன்னியும், கர்த்தரே;
தண்டிக்காமல், ரட்சியும்;
என்னை எவ்விதத்திலும்
விழப்பண்ணப் பேய்திரியும்,
அதற்கென்னைத் தப்புவியும்.

6. உம்மை  விட்டுப்போய் அலைந்த
நான் திரும்பி வந்தேனே,
உமது சுதன் அடைந்த
சாவால் ஐக்யம் பெற்றேனே;
நான் என் குற்றங்களுக்குப்
போக்குச் சொல்லேன், உமது
அன்போ அதன் பாரத்துக்கும்
மா அதிகமாயிருக்கும்.

7. கிருபையின் பொழுதான
ஸ்வாமி இந்த ராவிலும்
என்மேல் தேவரீர் அன்பான
ஜோதியாய்ப் பிரகாசியும்.
என்னை நீர் இருட்டிலே
கைவிடாமல் அண்டையே
தங்கி, என்னை நேசமாக
ஆதரித்துக் கொள்வீராக.

8. எனக்குச் சதி நினைக்கும்
அந்தகாரப் பிரபு
வைக்குங் கண்ணிக்கும் வலைக்கும்
தப்ப, தேவரீருக்கு
என்னை ஒப்புவிக்கிறேன்.
ஸ்வாமி, உம்மைப்பற்றினேன்;
நெஞ்சிலே நீர் ஒளிவீசும்,
அப்போ மோசங்கள் தணியும்.

9. என் இமைகள் தூக்கத்தாலே
மூடிக்கொண்டு போகியும்.
என் மனம் தன்வாஞ்சையாலே
உம்மை அண்டிக்கொள்ளவும்;
தூங்கியும் உம்மோடேதான்
ஐக்யப்பட்டிருக்க, நான்
தேவரீர்மேல் சிந்திப்பாகச்
சொப்பனத்தைக் காண்பேனாக.

10. ஆசீர்வாதம் தந்து காரும்,
எனக்கிந்த ராவிலே
சுக நித்திரையைத் தாரும்;
உமதாதரிப்புக்கே
வீட்டார் இனத்தார்களும்
நேசரும் பகைஞரும்
ஆவி தேகம் எல்லாமாக
ஒப்புவித்திருப்பதாக.

11. அமளி, திகில், வியாதி,
சண்டை, யுத்தம், கலகம்,
தீயின் வெள்ளத்தின் உபாதி,
பெருவாரி விக்கினம்,
அசுப்பான அழிவும்
அணுக ஒட்டாதேயும்,
கர்த்தரே, நான் பாவியாகச்
செத்துக் கெட்டுப்போகேனாக.

12. அப்பா, என் விண்ணப்பத்துக்குத்
தயவாய்ச்செவிகொடும்;
இயேசுவே, என் மனத்துக்குத்
நித்த ஒளியாயிரும்.
பரிசுத்த ஆவியே,
நேச அனுகூலரே,
வேண்டினோன்மேல் தயவாகும்
ஆமேன், உம்மால் யாவும் ஆகும்.

Joh. Rist,  † 1667.