1. கர்த்தாவே, ஞானந்தாறோர் நீர்,
என் பைத்தியத்தை அறிவீர்;
நீரே துணை செய்யாவிட்டால்,
நான் என்றைக்கும் வீண் வேலையாள்.
2. என் ஜென்மத்தால் என் புத்தியே
இருளால் சூழப்பட்டதே,
என் நெஞ்சுக்குத் துர்க்குணமும்
உண்டே, கலக்க நினைவும்.
3. தெய்வீக காரியத்திலே
என் சுய புத்தி போதாதே;
அடியேனுக்கு நல்வழி
என்னால் தெரிவதெப்படி?
4. எல்லா லெளகீக ஞானமும்
விவேகமும் உண்டாகியும்,
நான் உமதொளிவின்றியே
இருந்தால், நான் நின்மூடனே.
5. யாதொருவன் மா கல்வியைக்
கற்றாலும், தெய்வ பயத்தை
அடையானேயாகில், அவன்
கல்லாரிலும் நிர்ப்பாக்கியன்.
6. தன்னிச்சையான அறிவே
நரரை மோசம் போக்குமே;
அகந்தையுள்ள புத்திமான்
எத்திக்கிலும் இடறுவான்.
7. அநேகர் தங்கள் புத்தியைச்
சார்ந்ததினாலே தங்களைப்
பிசாசுடைய கையிலே
ஒப்புக் கொடுக்கிறதுண்டே.
8. ஆ, என் பிதாவே, என்னிலே
இருக்கும் பைத்தியத்தையே
அகற்றி, புது நெஞ்சையும்
குணத்தையும் தந்தருளும்.
9. நீர் உமதாசனத்தண்டை
இருக்கும் தெய்வ ஞானத்தை
என் ஆத்துமத்துக்கருளும்,
இவ்வேண்டுதலைக் கேட்டிரும்.
10. அதனுடைய ஒளிவு
இருண்ட புத்திக்கானது;
அத்தாலே நல்ல புத்தியும்
சீரான மார்க்கமும் வரும்.
11. அதும்மிலே பிறந்தது,
அதனுடைய மேன்மைக்கு
ஒப்பில்லை; புண்ணியம் எல்லாம்
அதன் வரங்களால் உண்டாம்.
12. அது துக்கித்தவர்களை
நன்றாகத் தேற்றி, மனத்தை
அதன் விசாரங்களுக்கு
நன்றாய் விலக்குகின்றது.
13. பிழைக்கவும், சுகிக்கவும்
அது வழியைக் காண்பிக்கும்;
அதன் சொற்கேட்ட மனிதன்
செத்தும், பிழைத்திருப்பவன்.
14. ஆ, எனக்கும் நீர் தயாவைச்
செய்தும்முடைய ஞானத்தை
என் ஏழை ஆத்துமத்திலே
இறங்கப்பண்ணும், கர்த்தரே.
15. அத்தாலே என்னை முழுதும்
புதியோனாக்கியருளும்,
அத்தால் என் வேலை லக்குக்கு
நேராய் வரக்கடவது.
16. நான் உம்முடைய சித்தத்தை
எப்போதும் நோக்கிக் கொண்டதை
அறிய, நல்லுணர்வையே
அத்தால் அளியும், கர்த்தரே.
17. அத்தாலே திறமையையும்
நான் சத்தியத்தை என்றைக்கும்
கோணாதபடி காக்கிற
குணத்தையும் நீர் அருள.
18. நான் உம்முடைய வார்த்தையைச்
சினேகித்துச் சன்மார்க்கரைச்
சேர்ந்தும்முடன் எந்நேரமும்
ஜெபத்தால் சஞ்சரிக்கவும்.
19. நல்ல புத்தியுள்ளோனாய்
இருந்தெப்போதுந்தயவாய்
அடுத்தவனைப் பார்க்க, நீர்
வரம் அளிக்கக் கடவீர்.
20. விசேஷமாய் உம்முடைய
சிநேகத்தில் நான் வளர;
இதே மெஞ்ஞானம்; தேவரீர்
நின் மூடனைச் சினேகியிர்.
P. Gerhardt. † 1566.