1. கர்த்தாவின் செயல் நல்லது,
தப்பற்ற ஞாயமாக
விளங்கப் போகும் அதற்குக்
கீழ்ப்பட்டிருப்பேனாக,
இக்கட்டிலே,
ரட்சிப்பாரே;
புயல் தெளியுமட்டும்
என் தம்பிரான் ஆளட்டும்.
2. கர்த்தாவின் செயல் நல்லது,
எத்தற்ற உண்மையான
அவருடைய தயவு
நான் நம்பத் தக்கதான
நங்கூரமாம்;
பொறுக்கலாம்,
பிதாவால் எந்தத் தீங்கும்.
ஆங்கலாம் வந்தால், நீங்கும்.
3. கர்த்தாவின் செயல் நல்லது,
நான் கெட்டுப் போகப்பாரார்;
பிதாவானோர், மருந்துக்குப்
பதிலாய் நஞ்சை வாரார்;
பயப்படேன்,
நான் நம்புவேன்,
காப்பவர் அவர்தாமே
என் வைத்தியருமாமே.
4. கர்த்தாவின் செயல் நல்லது,
சந்தோஷ நாள் வந்தாலும்,
என் நன்மைக்கவர் எனக்கு
இக்கட்டனுப்பினாலும்
அவர்க்கு நான்
ஆதீனந்தான்
கர்த்தாவின் அன்பினியும்
வெளிச்சமாய்த் தெரியும்.
5. கர்த்தாவின் செயல் நல்லது,
அதற்கு நான் அட்ங்கி,
குடிக்கிற கசப்புக்கு
என் மனது கலங்கி
இருப்பானேன்,
அமருவேன்;
முடிவிலே நோவாறும்,
தித்திப்புமாக மாறும்.
6. கர்த்தாவின் செயல் நல்லது,
நான் அதில் ஊன்று மட்டும்
என்மேல் இடுக்கண் ஆபத்து
எத்துன்பமும் வரட்டும்
இப்பிள்ளையைப்
பிதாவின் கை
அணைத்துக்கொண்டெந் நாளும்
எல்லாம் நன்றாக ஆளும்.
Sam. Rodigast, † 1708