266. பயப்படாதே மனமே, உன் கர்த்தர்

1. பயப்படாதே மனமே,
உன் கர்த்தர் ஆதரிப்பார்,
சகாயஞ் செய்வோமென்றாரே
திக்கற்றோரை ரட்சிப்பார்;
இக்கட்டிலே திகையாதே,
கிறிஸ்தோர் சகிக்கிறார்கள்,
கர்த்தர் துணை என்றவரைச்
சார்ந்தோர் ஜெயம் காண்பார்கள்.

2. சன்மார்க்கனான யோசேப்புக்
உபத்ரவஞ் சகித்த
யோபு தாவீதும் மற்றோரும்
பராபரன் குறித்த
நாள் வரவே இக்கட்டிலே
இருந்து நீக்கினார்கள்;
இந்நாளிலே கர்த்தாவையே
சார்ந்தோரும் நீங்குவார்கள்

3. நான் விழவேண்டுமென்கிற
பிசாசுகள் சீறட்டும்;
நான் நம்பும் கர்த்தாவுடைய
கை ஆபத்தை அகற்றும்;
நல் வார்த்தையைக் குமாரனைக்
கொண்டெனக்குக் கொடுத்தார்,
அத்தால் கர்த்தர் என்னுடைய
சந்தேகத்தை அறுத்தார்.

4. உன்கர்த்தர் எங்கே என்றதாய்
பொல்லார் மா நிந்தையாகச்
சொன்னாலும் நான் அதிகமாய்
பலத்துப் போவேனாக;
என் கோட்டையும் என் துக்கமும்
உன்னதமானோர் தானே;
நீர் என் துணை என்றவரைச்
சார்ந்தோன் வெட்கப்படானே

5. பராபரன் என் சத்தத்தைக்
கேளாதே போனார் என்றும்,
பகைஞர் பண்ணும் யோசனை
வெற்றியாய்ப் போகுமென்றும்
காணப்பட்டும், நான் என்றைக்கும்
கைவிடப்பட்டோன் அல்ல
என்றறிவேன், நான் நம்புவேன்
கர்த்தாவின் சொல் பொய்யல்ல

6. என் மனமே, மகிழ்ந்திரு.
உன் மாளிகை விழாது;
பேய்லோகந் துன்பம்உனக்குப்
பொல்லாப்பை உண்டாக்காது.
இம்மானுவேல்யாவுக்கும் மேல்
முன்தான் ஜெயஞ் சிறந்தார்;
தயாபரர் ரட்சிப்பவர்.
உன் நோவை அவர் கண்டார்.

7. கருத்தாய்த் தெய்வ தயவை
எப்போதுந் தேடி நல்ல
நடக்கையான பிள்ளையைக்
கர்த்தா மறந்தோர் அல்ல;
நற்பக்தியும் சிநேகமும்
உண்டானவன் சகிப்பான்;
ஆகையினால் தன் கர்த்தரால்
நலம் அனுபவிப்பான்

8. கர்த்தாவை விட்டு மாந்தரைச்
சார்ந்தோனோ கேடடைவான்
ஒர்க்காலும் அவன் ஒளியைக்
காணாதோனாய் அலைவான்;
கர்த்தர்துணை, நான்இயேசுவை
முன்னிட்டு வேண்டிக்கொள்வேன்;
சந்தோஷமாய் மகிழ்ச்சியாய்
ரட்சித்தார் என்றுஞ் சொல்வேன்.

Schmucker,  † 1578.