1. என் இதயமே, களித்து,
உன் உபாதியை மற,
இங்கே நோவனுபவித்து,
கஸ்தியால் கசங்கின
உன்னை இயேசு ஸ்வாமியார்
மோட்சத்துக் கழைக்கிறார்;
அங்கே என்றைக்கும் களிப்பாய்
ஆண்டவரைத் தரிசிப்பாய்.
2. என் பராபரனை நோக்கி
நித்த நித்தங் கூப்பிட்டேன்.
அவர் என் இக்கட்டைப் போக்கி
ஆதரிக்கக் கெஞ்சினேன்,
என் வழியின் முடிவைக்
காண அஞ்சற்காரனைப்
போலே வெகு ஆசையானேன்,
சாவின் மேலே வாஞ்சிப்பானேன்.
3. ஏனெனில், இதோ, மலர்கள்
முள்ளுகளின் நடுவே
பூக்கும் போல க்ரிஸ்தவர்கள்
வெகு துன்பங்களிலே
இங்கே அகப்பட்டவர்,
சஞ்சலம் இக்கட்டிடர்,
ஆபத்தின் புயல்கள் தானும்
இங்கே வெகுவாகக் காணும்.
4. ஜென்மப் பாவம் லோகம் பேயும்
எங்கள் ஆத்துமங்களை
ஓய்வில்லாமல் துன்பஞ் செய்யும்
பலவிதச் சோதனை
எங்களுக்கு மோசமும்
நோவுபத்ரவத்தையும்
இங்கே தங்குகையில், என்றும்
மிகுதியும் உண்டு பண்ணும்.
5. நாங்கள் காலமே எழுந்து
சுற்றிப் பார்த்தவுடனே
பலவித தொல்லையுண்டு,
கவலையுங் கூடுதே,
நோவும் வாதையும் உண்டாம்
கண்ணீர் எங்கள் அப்பமாம்,
சூரிய விளக்கிருண்டு
போன போதுந்துக்கம் உண்டு.
6. என்றைக்கும் அன்பாய் விளங்கும்
பொழுதே, ஒளி வீசும்;
இயேசுவே என்மேல் இரங்கும்,
தூரமாயிராதேயும்;
நான் சந்தோஷத்துடனே
சென்றுபோக, மீட்பரே,
நீர் வழியும் நீர் துணையும்,
நீரே என்னை வந்தழையும்.
7. எனக்காகக் காயப்பட்ட
உம்மைப் பற்றிக் கொள்ளுவேன்,
இப்படி நான் முடிவுற்ற
ஜீவனில் ப்ரவேசிப்பேன்;
கள்ளன் போயிருக்கிற
பரதீசில் என் சொந்த
ஆவிக்கும் இடம் அளிப்பீர்,
அங்கே என்னைப் பூரிப்பிப்பீர்.
8. கண் வெளிச்சமும், செவியும்,
பேச்சும் அற்றுப் போகியும்,
என் வினாவு சிதறியும்,
நீரே என் வெளிச்சமும்,
என் உயிரும், என் நல்ல
ஆதரவுமாகிய
கர்த்தர், மோட்ச வாசல் நீரே
அங்கே சேர்த்துக் கொள்ளுவீரே.
9. லாசருவின் மரணத்தில்
சம்பவித்தபடியே,
தேவதூதர் என்னிடத்தில்
வந்து, நான் மரிக்கவே,
நீங்கலாக்கும் ஆவியை
அங்கே தானே உம்மண்டை
கொண்டு போக நீர் அன்பாக
கட்டளையிடுவீராக.
10. என் இதயமே, களித்து
உன் உபாதியை மற,
இங்கே நோவனுபவித்துக்
கஸ்தியால் கசங்கின
உன்னை இயேசு ஸ்வாமியார்
மோட்சத்துக் கழைக்கிறார்;
அங்கே என்றைக்குங் களிப்பாய்
ஆண்டவரைத் தரிசிப்பாய்.
From Sachsen, 1620.