1. என்னை மீட்டுத் தாங்கிய
இயேசு ஜீவனுள்ளோராமே;
அவரை அறிகிற
நான் மகிழ்ந்திருக்கலாமே;
என்னைச் சாவின் ராத்திரி
ஏன் கலக்கிடும் இனி.
2. ரட்சகர் பிழைக்கிறார்,
நானும் அவரோடிருந்து,
வாழ்வேன்; சாவை நீக்குவார்,
எனக்கென்ன பயம் உண்டு
சிரசை அவயவம்
சேருவதவசியம்.
3. நம்பிக்கையின் கட்டினால்
அவரோடே கட்டப்பட்டேன்,
விசுவாச பந்தியால்
அவரை அணைக்கக் கற்றேன்;
சாவால் நானும் அவரும்
வெவ்வேறாகோம், என்றைக்கும்.
4. நான் தசைதான், ஆகையால்
எப்போதோ தூளாகச் சாவேன்
செத்தும், மீண்டும் அவரால்
மண்ணை விட்டுயிர்த்தோனாவேன்,
நித்தம் மகிமையிலே
அவரோடிருக்கவே.
5. இந்தத் தோலினாலேதான்
அப்போ மூடப்பட்டு நிற்பேன்
இந்தத் தேகத்தோடே நான்
தம்பிரானைத் தரிசிப்பேன்,
என்றும் இச்சதையுடன்
இயேசுவை நான் பார்ப்பவன்
6. நான் இக்கண்ணால் அவரை
அப்போ கண்டறிந்திருப்பேன்;
நான், நான் தான் என்கைகளை
அவரைத் துதித்தெடுப்பேன்;
இந்தத் தாழ்வு மாத்திரம்
என்னைச் சூழாதப்புறம்.
7. இங்கே நான் தவிக்கிறேன்,
அங்கே மகிமை தரிப்பேன்;
மண்ணில் மண்ணாய்த்தங்கினேன்
விண்ணில் விண்ணோனாய்க் கெலிப்பேன்
ஜென்ம உடலுள்ள நான்
அங்கே ஆவியங்கத்தான்.
8. என் அவயவங்களே,
நீங்கள் பூரிப்பீர்களாக.
செத்தபின் திரும்பவே
மா எக்காளச் சத்தமாகக்
கடைசியில் ஸ்வாமியார்
உங்களை எழுப்புவார்.
9. நான் குழி பாதாளத்தை
நரகத்தையும், நகைப்பேன்,
மேகங்கள்மேல் கால்களைக்
கிறிஸ்து வரும்நாளில்வைப்பேன்.
தீமைகளெல்லாம் அப்போ
அற்றுப்போயிற்றல்லவோ.
10. லோக ஆசை இச்சையை
இப்போதே மிதித்துப் போடு,
ஆவியே, நீ இயேசுவைச்
சேர்ந்தென்றைக்கும் அவரோடு
தங்க நாடும் வாழ்வுக்குப்
போக ஆயத்தப்படு.
Luise Henriette,
electress of Brandenburg, † 1667.