295. என்தன் ஆத்ம நேசரே

1. என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம்போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து, இயேசுவே,
திவ்ய மார்பில் காருமேன்,
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்,

2. வல்ல தேவரீர் அல்லால்;
வேறே தஞ்சம் அறியேன்;
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையைச்
செட்டையாலே மூடுவீர்.

3. குறை யாவும் நீக்கிட
நாதா, நீர் சம்பூரணர்;
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்
நீரே தூயர், தூயரே
நான் அநீதி கேடுள்ளான்,
நீர் நிறைந்த நித்யரே.

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள்பாயச் செய்குவீர்.
ஜீவ ஊற்றாம் இயேசுவே
என்தன் தாகம் தீருமேன்;
ஸ்வாமி, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.

C. Wesley, † 1742.